அடுத்த நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
பச்சைநிறத்துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்; இவ்விருது ரூ.5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்
200 வேளாண் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு புதிய தொழில் தொடங்க தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்; தோட்டக்கலை துறை அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸாப் குழுக்கள் அமைக்கப்படும்.
பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசின் பங்கீடாக ரூ.2,331 கோடி ஒதுக்கீடு; பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும்; 3 - 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு 11 கோடி செலவில் விவசாய கருவிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும்
60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும்; சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு; கோவையில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.