கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருமல், சளி தொந்தரவு உள்ளவர்கள் பழனி கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென பழனி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது வரை ஒரு நாளைக்கு 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு அனைத்து செல்போன்களிலும் தற்போது காலர் டியூனாக கொரோனா விழிப்புணர்வு வசனம் உள்ளது. கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு முக கவசம் அவசியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையாக கருதப்படும் பழனி தண்டாயுதபானி சுவாமி கோவிலிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மார்ச் 30 ஆம் தேதி வரை பழனி கோவிலில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரம் துவங்க உள்ளது. இவ்விழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கையாக இருமல் ,சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதையும், திருவிழாவில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் ரோப்கார் நிலையம், விஞ்சு நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை முகாம்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பழனி கோவில் நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.