பிறந்த குழந்தைகளுக்கு தேன், சர்க்கரை நீர் தருவதை தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்தார்.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா சேலத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 7) நடந்தது. மாநகராட்சி ஆணையர் சதீஷ் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அவர் பேசியது,
பிரசவித்த தாய்மார்கள், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, முதல் 6 மாத காலங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்திட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் கொடுக்கப்படும் முதல் பால் (சீம்பால்) குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும்.
சீம்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய வெள்ளை அணுக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, நிமோனியா, அம்மை வகை நோய்கள் வராமல் தடுக்கும்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பிறந்த குழந்தைகளுக்கு தேன், சர்க்கரை நீர் ஆகியவை கொடுப்பதை தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே கொடுத்திட தாய்மார்களுக்கு வலியுறுத்த வேண்டும். தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு அறிவாற்றல், நினைவாற்றல், விளையாட்டுத்திறன், உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு ஆணையர் சதீஷ் பேசினார். விழாவில் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு பச்சைப்பயிறு, பால், முட்டை வழங்கப்பட்டது.