
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
'சாட்டை' யூடியூப் சேனல் நடத்திவரும் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசு மீதும் அவதூறாக பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்த சாட்டை முருகன் கனிம வளங்கள் கொள்ளையைத் தடுக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

சாட்டை துரைமுருகனுக்குக் கொடுத்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி புகழேந்திக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ''ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாக முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார். அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிப்பதைத் தவிர்க்கலாம்'' என கருத்து தெரிவித்த நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசியதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.