சென்னை ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. தன் மனைவி ரோஜா மற்றும் பெண் குழந்தை சுஜாதாவோடு இங்கு வசித்து வந்தார் அருண்பாண்டி. அவர் பாண்டிச்சேரி சென்றுவிட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்காரனான வீரா, நள்ளிரவில் வீடு புகுந்து ரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். ரோஜா எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான். பிறகு, தாய் அருகில் படுத்திருந்த குழந்தை சுஜாதாவையும் கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் போய் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலையில் ரோஜாவின் வீடு நெடுநேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது, தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, பக்கத்தில் உள்ள வீராவின் வீட்டுக்கு மோப்ப நாய் போனது. விசாரணையின்போது அவன் போலீசாரிடம் “நேற்று நள்ளிரவு மிதமிஞ்சிய போதையில் இருந்தேன். உணர்ச்சிவசப்பட்டு ரோஜாவை சில்மிஷம் செய்தேன். அவர் மறுத்துவிட்டதால் கொலை செய்தேன்.” என்று வாக்குமூலம் தந்திருக்கிறான்.
;:
நரிக்குறவர் இனத்தில் ஆணுக்கு நிகரானவர்கள் பெண்கள். குருவிக்காரன் எனப்படும் அந்த இனத்தில் பெண்ணடிமைத்தனம் இல்லவே இல்லை. வெளியில் சென்ற பெண், மாலை 6 மணிக்குள் வீடு வந்து சேரவேண்டும் என்பது அந்த இனத்தின் கட்டுப்பாடு. திருமணத்தின்போது, ஆண்கள்தான் பெண் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும். நரிக்குறவர்கள் பிறசமூகப் பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதில்லை. தனிச்சிறப்புக்கள் இத்தனை உள்ள நரிக்குறவர் இனத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் பலாத்காரத்தால் கொலை செய்யப்பட்டதற்கும், பெண் குழந்தை உயிர் பறிக்கப்பட்டதற்கும், ‘குடி’ ஒரு காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.
குடிப்பழக்கம் தன் குடியை மட்டுமல்ல, அடுத்தவர் குடியையும் கெடுத்துத் தொலைத்திருக்கிறது.