தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள, ஊரணிபுரம் கடைவீதியில் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பேருந்துகள் செல்லும் போது, சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் பாதசாரிகள் மீது பட்டு, உடைகள் வீணாவதும், நடந்து செல்வோர் தவறி விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாக இருந்தது.
மேலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தி ஆகி, சுகாதார சீர்கேடு ஏற்பட காரணமாக இருந்தது. இதுகுறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கு பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று ஊரணிபுரம் சிஐடியு ஆட்டோ சங்கத் தொழிலாளர்கள் களத்தில் இறங்கினர். மழைநீர் வடிகால் அடைப்புகளை சரிசெய்து, சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்த இடங்களில் 4 டிப்பர் லாரிகளில் மண் மற்றும் உடைந்த செங்கல்கற்களை கொட்டியும் சீரமைத்து, தங்கள் சொந்தச் செலவில் சாலையை சரிசெய்தனர்.
இந்நிலையில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகியோர் ஆட்டோ சங்கத் தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ரெங்கசாமி, துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் சேட்டு, துணைப் பொருளாளர் லெட்சுமணன் மற்றும் ஆட்டோ சங்கத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் அரசு செய்ய வேண்டிய வேண்டிய வேலையை, தன்னார்வலர்களாக தாமாகவே முன்வந்து சாலையை சீரமைத்த ஆட்டோ சங்க தொழிலாளர்களை பொதுமக்கள், கடைவீதி வியாபாரிகளும் பாராட்டியுள்ளனர்.