புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(48). இவர், பிரபல தனியார் உணவு டெலிவரி ஆப்பில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவில், விஜயகுமார் காமராஜர் சாலையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டே சாலையின் ஓரம் நடந்து சென்றார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஆட்டோ ஒன்று சாலையின் ஓரம் நடந்து சென்ற விஜயக்குமார் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் பலத்த காயமடைந்தார். உடனே, ஆட்டோவை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் விபத்தில் சிக்கிய விஜயகுமாரை, சாலையின் ஓரம் இருந்த கோவில் முன்பு அமர வைத்து வைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், இரவு முழுவதும் அங்கேயே இருந்த விஜயகுமார் எந்த வித உதவியும் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார், விஜயக்குமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அதிவேகமாக வந்த ஆட்டோ சாலையின் ஓரம் நடந்து சென்ற விஜயகுமாரின் மீது, மோதுவது பதிவாகி உள்ளது. ஆனால், விபத்தில் காயமடைந்த விஜயகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் அவரை சாலையின் ஓரமே விட்டு விட்டு, அங்கிருந்து ஆட்டோ ஓட்டினர் தப்பிச் சென்றது, சிசிடிவி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சிசிடிசி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.