தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 16 விவசாயிகள்
ஆர்ப்பாட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 2017, ஆகஸ்ட்-16ந் தேதி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கெள்கிறது.
கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை மத்திய - மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும்; கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி ரூ.2000 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்கவும், நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. ''