ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன் படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்து, அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ - மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506(ii) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.