
'நாளைக்கு வந்திரு' என முன்னாள் மாணவனைப் பள்ளிக்கு அழைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக ஆசிரியர்கள் தங்களை ஆபாசமாகப் பேசி அழைக்கிறார்கள் என்று மாணவிகளின் புகார்களால் பல ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை கல்லூரியில் ஒரு மாணவி கொடுத்த புகாரில் இரு கௌரவ பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் தனது சொந்த ஊரில் உள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பள்ளியே கதியெனக் கிடப்பதுடன் இளைஞர்களையும் அழைத்து வைத்துக் கொள்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ஆசிரியரின் குரல் ஒரு முன்னாள் மாணவருடன் பேசும் பேச்சுக்கள் ரொம்பவே மோசமாக உள்ளது. “அன்று நீ வரல ரொம்ப நேரம் காத்திருந்தேன். நாளை மேட்ச் இருக்கு காலையில முடிஞ்சுடும் அப்புறம் வா... நல்லா ... ” என்று அந்த ஆடியோவில் வெளியான பேச்சுக்கள் மாணவர்களின் பெற்றோர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. கல்வித்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலை உருவாகும் என்று இருந்த நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலர் வரை சென்று முதற்கட்ட விசாரணை தொடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து வெளியேற்றப்பட்டவர் என்றும் கூறுகின்றனர்.