அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம்
கடலூர் நகரில் ஜவான் பவான் - கம்மியம்பேட்டை இணைப்பு சாலை மற்றும் சரவணா நகர் - நத்தப்பட்டு இணைப்பு சாலைகளுக்கான சாலை பணிகள் தொடங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அடையாள உண்ணாவிரதம் கடலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. அமைச்சர் எம்.சி.சம்பத்தின் கவனத்தை ஈர்க்கவே இந்த உண்ணாவிரதம் நடைப்பெற்றதாக தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையிலும் பஸ் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி குரு.ராமலிங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகி சுப்புராயன் உள்ளிட்டோர் முன்னிலையிலும், உண்ணாவிரதத்தை வழக்கறிஞர் திருமார்பன் தொடங்கி வைத்தார். கடலூரின் அவல நிலைகளையும் சுட்டிக் காட்டி, சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் நகரத்தை மேம்படுத்த வேண்டும் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சேகர், காங்கரஸ் நிர்வாகி வெங்கடேசன், வழக்கறிஞர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரையாற்றினர்.
- சுந்தரபாண்டியன்