ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் ஏப். 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சீரமைப்புப் பணிகள் நடக்க உள்ளதால், இக்குறிப்பிட்ட நாள்களில் இலகுரக, கனரக வாகனங்கள் குப்பனூர் சாலை வழியாக ஏற்காட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் 2 மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள், ஏப். 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடப்பதால், பாதுகாப்பு நலன் கருதி, இந்த நாள்களில் சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இதர இலகு ரக, கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையாக அயோத்தியாப்பட்டணம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட நாள்களில் குப்பனூர் சாலை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.