சிவகாசியில் முக்கிய பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கிப் படித்துவரும் 11-ஆம் வகுப்பு மாணவிகள் மூன்றுபேர், கடந்த 15-ஆம் தேதி இரவு 8-10 மணிக்கு இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் காணாமல் போனார்கள். அந்தப் பள்ளி முழுவதும் தேடிப்பார்த்தும், அருகிலுள்ள இடங்களில் தேடி அலைந்தும், அந்த மாணவிகள் கிடைக்கவில்லை. விடுதி காப்பாளர் ஜான்ஸி சொர்ணம் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவானது.
காவல்துறை தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும், ஒவ்வொரு ஊரிலும் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் மாணவிகள் தேடப்பட்டனர். அப்போது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, மதுரை மகளிர் போலீசார் உதவியுடன், திருத்தங்கல் காவல்நிலையத்துக்கு மீட்டு வரப்பட்டனர்.
மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, “விடுதியில் தங்கிப் படிக்க விருப்பம் இல்லை. விடுதி உணவும் பிடிக்கவில்லை. அதனால், விடுதியிலிருந்து வெளியேறினோம். முதலில் சாத்தூர் போனோம். அங்கிருந்து மதுரை சென்று உறவினர் வீடுகளுக்குப் போகலாம் என்று நினைத்தோம். அதற்குள் போலீசார் எங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்” என்று கூறியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அந்தப் பள்ளி விடுதிக் காப்பாளரிடம் மாணவிகள் ஒப்படைக்கப்பட்டனர்.
பொதுவாக பள்ளிகளோ, கல்லூரிகளோ விடுதி என்றாலே தரமற்ற உணவுகளே வழங்கப்படுகின்றன. விடுதிச் சூழலும் நடவடிக்கைகளும்கூட, ஒருவித மன இறுக்கத்தைத் தருவதாக உள்ளன. இந்த நிலை மாறவேண்டும்.