நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 ஆவது முறையாகப் பிரதமர் மோடி இன்று (09.04.2024) தமிழகம் வருகிறார். 2 நாள் பயணமாகத் தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை, வேலூர் மற்றும் நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதே சமயம் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிரதமர் மோடி இன்று (09.04.2024) மாலை 06.00 மணிக்கு தியாகராயநகர் சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள். கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை. அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராயநகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிற்பகல் 03.00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாறை நோக்கி செல்லும் வாகனங்கள், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், சிப்பெட்டியில் (CIPET)இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள். சிபிடியில் (CPT ) இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் மதியம் 02.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இடையிடையே தடை (சரக்கு வாகனங்கள்) செய்யப்படும்” எனத் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.