
இன்று காலை 11மணிக்கு பெரம்பலூரில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் தமிழக முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைத்தருவதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் பொருட்டு முதல்வர் பெரம்பலூர் வரும்நாளில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மு. ஞானமூர்த்தி (தலைவர், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் திமுக) தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
பின் ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்புக்கு மாநில அரசு அறிவித்த பரிந்துரை (SAP)விலை பாக்கிதொகை ரூ.28 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 19-20ம் ஆண்டுக்கு கரும்பு விலை மாநில அரசு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 2020-2021க்கு மத்திய மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி டன்னுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலத்திட்டங்களான பிரதமர் கிஷான் நிதியுதவி திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், மக்காச் சோளத்திற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கும் திட்டம்,
கிணறு வெட்டும் திட்டம், மாட்டுக்கொட்டகை வழங்கும் திட்டம், விவசாயக்கருவிகள் வழங்கும் திட்டம், வரப்புகள் அமைக்கும் திட்டம் போன்றவற்றில் முறைகேடு நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
மத்திய அரசின் நிர்பந்தத்தால் மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்திற்கு தனி உயரழுத்த மும்முனை வழித்தடம் அமைத்து ஒருநாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரத்தை வழங்கும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். பச்சமலை கல்லாற்றின் குறுக்கே சின்ன முட்டுலூர் அருகே நீர்த்தேக்கம் அமைத்துத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.