தன்னிடமிருந்து தந்தை செல்போனை பறித்ததற்காக மாணவி மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாகச் சிறுமியைக் காப்பாற்றிய சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுடைய மகள் 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில் இந்த ஆண்டு கல்லூரிக்குச் செல்ல இருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்த அச்சிறுமி யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனைக் கண்டித்தும் சிறுமி கேட்காததால் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிச் சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, வீட்டின் மொட்டை மாடி பகுதிக்குச் சென்று கீழே குதிக்கப் போவதாகச் சுவர் விளிம்பில் அமர்ந்து கொண்டு மிரட்டல் விடுத்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தந்தை ரவிச்சந்திரன் விழித்தார். அப்பொழுது அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் மாணவி ஆபத்தான நிலையில் தற்கொலை செய்து கொள்வதுபோல் மிரட்டல் விட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்தனர். தீயணைப்பு வீரர் ஒருவர் நைசாகப் பேசிக் கொண்டே மாணவியை சமாதானப்படுத்தும் நோக்கில் அருகில் சென்ற நிலையில், மாணவி கீழே குதிக்கத் தயாரானார். உடனடியாக பிடித்த தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மேலே தூக்கி ஒருவழியாகச் சிறுமியைக் காப்பாற்றினர்.