சேலம் மாவட்டம் தாமரங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத்குமார். 32 வயதான இவர் தாரமங்கலம் அருகே உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றி வருகிறார். ஏப். 18ம் தேதி, வினோத்குமார் மானாத்தாள் அருகே தாண்டவனூர் பகுதியில் மண் கடத்தலை தடுத்து நிறுத்தி ஒரு டிராக்டர், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கனிமவளத்துறை அலுவலர் பிரசாந்த் மூலம் தொளசம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கச் செய்தார். அதில் கனிமவளத்துறை அலுவலர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பொக்லைன், டிராக்டர் உரிமையாளர் சித்துராஜ், உப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் விஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஏப். 28ம் தேதி விஏஓ வினோத்குமார் மானாத்தாள் கிராமத்திற்கு வந்தபோது அவரை திடீரென்று வழிமறித்த சித்துராஜ், தனது டிராக்டரை பறிமுதல் செய்து காவல்துறையில் ஒப்படைத்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர், விஏஓவின் அலைபேசியை பறித்துக்கொண்டு அரிவாளால் வெட்ட துரத்தினார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய விஏஓ வினோத்குமார், தொளசம்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து சித்துராஜ் மீது புகாரும் அளித்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் (பொறுப்பு), சித்துராஜ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், அலைபேசி பறிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய சித்துராஜை தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே மண் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சித்துராஜின் ஓட்டுநரான உப்பாரப்பட்டியைச் சேர்ந்த விஜியை (35) ஏப். 29ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மண் கடத்தலை தடுத்த விஏஓவை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் தாரமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.