Skip to main content

பட்டப் பகலில் அரசு ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்; சிதம்பரத்தில் பரபரப்பு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Attack on State President of Fair ration Shop Workers Union in broad daylight

 

சிதம்பரத்தில் பட்டப் பகலில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவருக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை காலை 10 மணி அளவில் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட மெய் காவல் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்துள்ளனர். இவர் நின்றபோது அவர்கள் கத்தியை எடுத்துள்ளனர். இதனை பார்த்து பயந்து இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு இவர் ஓடியுள்ளார்.

 

அப்போது இவரை விடாமல் துரத்திச் சென்று இவரது தலையில் மூன்று இடத்தில் பலமாக வெட்டியுள்ளனர். இவர்கள் வெட்டும்போது தடுத்ததால் இவரது கைவிரல் துண்டாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இவரை 108 அவசர ஊர்தி மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக் கரைகளை காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

 

இதேபோல் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு, இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் இவரது தலையில் அடித்ததால் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் மீது இன்று பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்