திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இரவு நேரத்தில் இரண்டு தரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டதில் ஒரு தரப்பினர் கடப்பாரை, கம்பி ஆகியவற்றை கொண்டு கொடூரமாக தாக்கும் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு தரப்பு இளைஞர்கள் கொடூரமாக மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் கடப்பாரை, பட்டாக்கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் மிகக் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
வெளியான காட்சிப் பதிவின் அடிப்படையில் இந்த சம்பவம் ஒன்றாம் தேதி நடைபெற்றது தெரியவந்துள்ளது. பால்ராஜ், பத்மநாதன் என்ற இரண்டு இளைஞர்கள் இதில் படுகாயமடைந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய கிருஷ்ணகுமார், சரத் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.