கூடுதல் பேருந்துக்கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது தாக்குதல்!
பேராவூரணி அருகே கூடுதல் கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பொருளாளரை தாக்கி, பேருந்தில் இருந்து கீழே தள்ளிச்சென்ற தனியார் பேருந்து ஊழியர்களை காவல்துறை தேடிவருகிறது.
பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்(வயது 59). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பொருளாளராகவும் உள்ளார். நாகலிங்கம் வியாழன் அன்று காலை கட்சி வேலையாக கழனிவாசல் வந்து விட்டு, தனது ஊரான ரெட்டவயலுக்கு காலை சுமார் 8:30 மணிக்கு தனியார் பேருந்தில் திரும்பியுள்ளார். வழக்கமாக வசூலிக்கும் ரூ. 5 கட்டணத்திற்கு பதிலாக, நடத்துநர் ரூ.8 வசூலித்துள்ளார். இதை நாகலிங்கம் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட 3 பேர் நாகலிங்கத்தை சரமாரியாக தாக்கி, ரெட்டவயல் ஆற்றுப்பாலம் அருகில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கீழே உருட்டி சென்றுள்ளனர். இதில் மயங்கி கிடந்த நாகலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
புகாரின் பேரில் நாகலிங்கத்தை தாக்கிவிட்டு தலைமறைவான தனியார் பேருந்து ஊழியர்கள் மூவரை பேராவூரணி காவல்துறை தேடிவருகிறது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, பேராவூரணி பகுதியில் 90 சதவீதம் பேருந்துகள் இயங்காததால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில், அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து ஊழியர்களை கைது செய்யாவிட்டால், சாலைமறியலில் ஈடுபடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இரா.பகத்சிங்