சேலம் மாவட்டம், மேட்டூரில் ‘மேட்டூர் அணை’ என்று அழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கடந்த 1925ஆம் ஆண்டு துவங்கி 1934ஆம் ஆண்டு கர்னல் டள்யூ. எம். எல்லீஸ் என்பவரின் வடிவமைப்பின்படி ரூ 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாக விளங்கியது. இந்த அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த 90 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் தூர் வாரப்படாமல் இருந்து வந்தது. இதனால் அணையில் மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணையைத் தூர் வார விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அணையில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தூர்வாருவதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதியைப் பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் குறிப்பிட்ட ஒரு பகுதியைத் தூர்வாரத் தமிழக அரசின் நீர்வளத்துறைத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் மேட்டூர் அணையில் முழுவதும் தூர்வாரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.