சீரழியும் போக்குவரத்துக் கழகங்கள்: சீரமைக்க அரசின் திட்டம் என்ன? ராமதாஸ் கேள்வி?
சீரழியும் போக்குவரத்துக் கழகங்கள், சீரமைக்க அரசின் திட்டம் என்ன? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆண்டு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 51 பொதுத்துறை நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மிகவும் அதிகமாகும். இதனால் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக அரசின் நிதி அமைச்சகம் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2602.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.499.67 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அடுத்ததாக கோவை அரசுப் போக்குவரத்துக்கழகம் ரூ.401 கோடியும், கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.388.61 கோடியும், நெல்லைக் கோட்டம் ரூ.340.60 கோடியும், விழுப்புரம் கோட்டம் ரூ.304.92 கோடியும் மற்ற போக்குவரத்துக் கழகங்கள் ரூ.300 கோடிக்கும் குறைவாகவும் இழப்பை சந்தித்துள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழப்பில் தான் இயங்கி வருகின்றன. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் பயனாக கடந்த 2004-05 ஆம் ஆண்டில் மட்டும் 6 போக்குவரத்துக் கழகங்கள் ரூ.39.91 கோடி இலாபம் ஈட்டின. ஆனால், அதே ஆண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.12.36 கோடி இழப்பை எதிர்கொண்டது. அதன்பின் 2005-06ஆம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ச்சியாக இழப்பில் இயங்கி வருகின்றன. 2008&09 ஆம் ஆண்டு வரை ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்து வந்த ஆண்டு இழப்பு இப்போது ரூ.3000 கோடியைத் தாண்டி விட்டது. 2011-12ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.8853.74 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் சேர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.16,145.94 கோடியாக உயர்ந்திருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு இந்த அளவுக்கு அதிகரித்தற்கு காரணம் அரசின் நிர்வாகத் திறமையின்மை தானே தவிர வேறொன்றுமில்லை. பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாதது தான் காரணம் என்று அதிமேதாவித்தனமான விளக்கம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இது போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் ஊழலை அதிகரிப்பதற்குத் தான் உதவுமே தவிர, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பை கட்டுப்படுத்துவதற்கு எந்த வகையிலும் உதவாது.
2013-14ஆம் ஆண்டில் ரூ.1266 கோடியாக இருந்த இழப்பு அதற்கு அடுத்த ஆண்டில் இரு மடங்காக, அதாவது ரூ.2337.09 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் போக்குவரத்துக் கழகங்களில் நடக்கும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான். இன்றைய நிலவரப்படி போக்குவரத்துக் கழகங்களின் மொத்த இழப்பு ரூ.20,000 கோடியையும், ஆண்டு இழப்பு ரூ.4,000 கோடியையும் தாண்டி விட்டது. இதை சமாளிப்பதற்காக வாங்கிய கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.850 கோடியை போக்குவரத்துக் கழகங்கள் வட்டியாக கட்டி வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நலிவடைந்து அதன் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளைக் கூட வழங்க முடியாமல் தடுமாறுவதற்கு காரணம் அவற்றில் நடைபெற்றும் மோசடிகள் சிறிதளவு கூட களையப்படாதது தான். சீரழிந்து வரும் போக்குவரத்து கழகங்களை சீரமைக்கும் எண்ணம் பினாமி தமிழக அரசுக்கு இல்லை.
போக்குவரத்துக் கழகங்களில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் அவற்றை வலுப்படுத்த முடியாது. எனவே, வல்லுனர் குழுவை அமைத்து பேருந்து கட்டணங்களை பெரிய அளவில் உயர்த்தாமல், நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப்பெற வேண்டும். அவற்றை செயல்படுத்தி போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயங்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.