கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி கொளஞ்சி(60). இவர், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் வந்து, தான் நாடிஜோதிடம் பார்ப்பதாகவும் அதன்மூலம் உடலில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை எடுத்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி கொளஞ்சி, அந்த நாடி ஜோதிடரிடம் நாடி பார்த்துள்ளார். அப்போது அவர், “உங்களுக்கு கை கால்களில் மூட்டு வலி உள்ளது. அதோடு இடுப்பு வலியும் இருக்கிறது. அதனை உடனே சரிசெய்ய வேண்டுமானால், உங்களது கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை கழற்றி கொடுங்கள். அதை நான் மாந்திரீகம் செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழற்றி ஜோதிடரிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கியதும் அவர், பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வரும்படி கொளஞ்சியிடம் கூறியுள்ளார். கொளஞ்சியும் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த நபர் தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்துள்ளார். தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியேவந்தபோது அந்த நபர் இல்லாததைப் பார்த்து கொளஞ்சி அதிர்ச்சியடைந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, கொளஞ்சி, அதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஊரில் இருந்த சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு மாயமானவரை தேடி சென்றனர். ஆனால், அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதையடுத்து கொளஞ்சி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் நாடி ஜோதிடர் எனக் கூறி நகை பறித்து சென்ற அந்த மர்ம மனிதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.