சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு செல்போன் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட புகாரில் உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன்பு சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, 6வது தொகுதிக்கு உட்பட்ட 15வது அறையில் இருந்து செல்போன், 1வது அறையில் இருந்து செல்போன் சார்ஜர், வயர் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இதுகுறித்த விசாரணையில், குண்டர் சட்டத்தில் கைதான விக்கு என்கிற சண்முகம் (23), கார்த்தி (29), விசாரணை கைதி ரவி என்கிற ரவிக்குமார் (31) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரித்ததில், உதவி ஜெயலர் ராகவன் மூலமாகத்தான் கைதிகளுக்குச் செல்போன், சிம் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கைதிகள் கார்த்தி, கோபி ஆகியோருக்காக வெளியே இருந்து செல்போன் வாங்கி, சிறைக்குள் கடத்திச்செல்ல உதவி ஜெயிலர் ராகவன் உடந்தையாக இருந்ததும், இதற்காக மேற்படி கைதிகள் தரப்பில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் விசாரணை நடத்த சேலம் மத்திய சிறை எஸ்பிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம் மத்திய சிறை எஸ்பி கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தினார். இதில் உதவி ஜெயிலர் ராகவன், கைதிகளிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு செல்போன் கடத்தலுக்குத் துணைபோனது தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்து சிறை எஸ்பி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.