சேலத்தில், ஒரே நாளில் மூன்று பெண்கள் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தேவையின்றி பொதுவெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த வாரத்தில் இருமுறை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவிலிருந்து, சேலம் வந்திருந்த இஸ்லாம் மதபோதகர்கள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டி என 5 பேர் உள்பட 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து 15 நாள்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தம்மம்பட்டியில் ஒருவர், கிச்சிப்பாளையத்தில் ஒருவர், அன்னதானப்பட்டியில் ஒருவர் என மொத்தம் மூன்று பெண்கள் மற்றும் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் உள்பட, நேற்று (ஏப். 12) ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என்பதால், அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களுடைய ரத்தம், சளி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் முடிவில்தான் இப்போது கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள மேலும் 22 பேர், சேலம் அரசு மருத்துவமனையின் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.