திருச்சி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதில் உள்நோயாளிகள் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நோயாளிகளோடு உதவிக்கு வரும் உறவினர்கள் இரவுநேரத்தில் மருத்துவமனை வளாகத்திலும், நடைபாதைகளிலும் ஓய்வெடுத்துவரும் நிலையில், அவர்களுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு, ஆண்களுக்கான அறையில் 28 படுக்கைகளும், பெண்களுக்கான அறையில் 20 படுக்கைகளும் உள்ளன. இந்த விடுதியில் ஆதார் கார்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதற்கான சீட்டு ஆகியவற்றைக் காண்பித்து நோயாளிகளின் உதவியாளர்கள் தங்க முடியும்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக விடுதி மூடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு புதிதாக படுக்கைகள் போடப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முன்பு இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டு வந்த விடுதியில், தற்போது ஒருநாள் இரவு தங்க ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.