Skip to main content

அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Asset hoarding case against minister Rejection of the request of the ed

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 80% விசாரணை முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி ஐயப்பன் பிறப்பித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
High Court order for Henry Thibane case

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

High Court order for Henry Thibane case

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (01.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த அப்போதைய தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரரான ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு எந்த தடையும் இல்லை” என வாதிட்டார். இதற்கிடையே சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை” எனத் தெரிவித்தார். 

High Court order for Henry Thibane case

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது. துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்?. இத்தனை உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப்போவது யார்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த எதிர் மனுதாரர்களின் ஆட்சேபத்துக்குப் பதிலளிக்க மனுதாரரான ஹென்றி திபேனுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

கள்ளச்சாராய வழக்கு; 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Forgery Case 7 people have been sentenced to court custody

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மெத்தனால் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் லால் ஜெயின், மெத்தனாலை விநியோகம் செய்த சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 

Forgery Case 7 people have been sentenced to court custody

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிவக்குமார்,  ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் விநியோகம் செய்த சிவக்குமார், ஆலை உரிமையாளர் பென்சிலால், கவுதம் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.