விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் கோவிலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை அங்கு இருந்த சிலர் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை அழைத்துச் சென்று செஞ்சி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் அதிகாரியை தாக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.