சேலம் அருகே உள்ள தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை ரூபாய் 1,022 கோடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கால்நடை பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கால்நடை பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, 5 ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்து முடித்த பின்னர் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்க வேண்டும். சேலம், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அடிக்கல் மட்டும் நாட்டுவார் திட்டத்தைத் தொடங்குவது இல்லை என்ற ஸ்டாலினுக்கு, கால்நடை பூங்கா சிறப்பு உதாரணம். பால் உற்பத்தியைப் பெருக்க கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் நன்மை கிடைக்குமோ, அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது, ஸ்டாலின் கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தது அ.தி.மு.க.வின் அரசு" என்றார்.
இந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.