சென்னையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிக்கூடத்தினை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இத்திட்டம் துவங்கப்பட்டதற்கு முதலில் அஸ்வினுக்கு நன்றி. ஏனென்றால், அவர் தான் இத்திட்டத்தின் துவக்கம். அவர் இல்லையென்றால் இத்திட்டம் உருவாகியிருக்காது. பல வருடங்களாக அவர் முயன்றுள்ளார். அது இந்த வருடம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அஸ்வின் சர்வதேச விளையாட்டு வீரர். அவர் இந்தியாவிற்காக ஆடியவர். இன்று மாலை ஐபிஎல் மேட்ச் உள்ளது. ஆனால், அவர் ராஜஸ்தான் அணிக்கு விளையாடுகிறார். ஆனாலும் அவர் விக்கெட் எடுத்தால் நாம் கைதட்டுவோம். ஏனென்றால், அவர் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்.
அஸ்வினிடம் எப்பொழுது வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பீர்கள் எனக் கேட்டேன். என்னால் எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் வந்து பயிற்சி அளிப்பதாக சொல்லியுள்ளார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 42 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் அத்தனை ஊராட்சிகளிலும் உள்ள கிரிக்கெட் டீமிற்கு கலைஞரின் பெயரில் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்க உள்ளோம்” எனக் கூறினார்.