Skip to main content

ஜெ மரண விவகாரம் - கடைசி பக்கத்தில் கலைஞரை நினைவுப்படுத்திய ஆறுமுகசாமி அறிக்கை!

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

ரகத

 

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

 


இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

 


இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் 561 பக்கம் உள்ள இந்த அறிக்கையில் கடைசி பக்கத்தில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி இரண்டு திருக்குறளோடு அறிக்கையை நிறைவு செய்துள்ளார். 

 

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

 

இந்தக் குறளுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய உரையை அவர் பயன்படுத்தியுள்ளார். " நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்" என்ற விளக்கத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

 

மற்றொரு இடத்தில்,

 

"காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
மேலாள் முகத்த களிறு" 

 

"வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்" என்ற மு.வ அவர்களின் மேற்கோளை பயன்படுத்தியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்