முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 13 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அண்மையில் அப்போலோ மருத்துவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியிருந்தது. இதற்கு முன்பே பலமுறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலேயே முடிந்துவிட்டது. மே மாதம் முழுவதும் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் 12ஆவது அவகாசம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அறிக்கையை அதற்குள் முடிக்க முடியாது எனவே அறிக்கையை தயார் செய்ய மேலும் ஒரு மாத காலமும், கூடுதலாக ஏழு நாட்களும் எடுத்துக் கொள்ள அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.