"தமிழக மக்கள் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நிவாரண நிதி அளியுங்கள்" என்ற தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 10 லட்சம் நிதியை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவை தமிழக முதல்வரிடம் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பிரமலைக் கள்ளர்களின் நீண்ட ஆண்டுகால போராட்டமும் கோரிக்கையுமான டி.என்.டி. சான்றிதழ் வழங்கக் கோரிய போராட்டத்திற்கு முடிவு கட்டும்வண்ணம் பிரமலைக்கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர் உள்ளிட்ட டி.என்.சி. சமுதாயத்தினரை டி.என்.டி.யாக மாற்றி தமிழக முதல்வர் ஆணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.
அதிமுக அரசு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டைப் பகிரச் செய்திட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகம் விசாரணை கமிஷனை ரத்துசெய்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்திட வேண்டும்.
நீண்ட காலமாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியச் சகோதரர்களை அவர்களின் உடல்நிலை, வயது, குடும்பம், கருணை ஆகிய அடிப்படையில் விடுதலை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.