சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் அந்நிறுவனம் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.
தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து விசாரித்தனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் மோசடியில் தொடர்பிருப்பதாக ரூசோ வாக்குமூலம் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவானதாகத் தகவல் வெளியானது. ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டிற்குச் சென்ற நிலையில் அங்கு யாரும் இல்லாததால் போலீசார் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
இந்நிலையில், தனக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது குழந்தை மற்றும் மனைவியை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் போலீசார் பதிலளிக்கும் வரை தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற ஆர்.கே.சுரேஷ் தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.