இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்துவருகிறன. இதில், தமிழகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. மேலும், கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதிக்கு அருகில் உள்ளது பட்டிவீரன்பட்டி எனும் ஊர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேள கிராமிய இசைக்கலைஞர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருவிழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறாத காரணத்தினால், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த இசை கலைஞர்கள் நேற்று அங்குள்ள முத்துலாபுரம் கருப்பணசாமி கோவிலில் கூடி தொடர்ந்து 3 மணி நேரம் இசை வாத்தியங்களை வாசித்து தங்களது எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.