நாத்திக கலைஞர் தான் சுவாசிக்கும் தமிழுக்காகக் கோவில் கொண்ட கதை சுவாரசியமானது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா. கணேசனுக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று அவரை அழுத்திக்கொண்டிருந்தது, " கோவில் என்றால் ஏதாவது மறுப்புக் கூறித் தட்டிக் கழித்திடுவார்.! இருப்பினும் எப்படியாவது கூறி அவரையும் இணைத்துக் கோவில் கட்டிடல் வேண்டுமென. ஐயா.! உலகின் மூத்த மொழியான நம் தமிழுக்குக்காக, தமிழன்னைக்குக் கோவில் கட்ட வேண்டும்." என தனது உள்ளக்கிடைக்கையை அன்றைய முதல்வராக இருந்த, தனது தமிழ் சகாவான கலைஞரிடம் கோரிக்கையாகக் கொண்டு சென்றிருக்கின்றார் கம்பன் அடிப்பொடியான சா.கணேசன்.
" நம்முடைய அன்னைக்குத் தானே.! நாம் சுவாசிக்கும் தமிழுக்குத்தானே கட்டிவிட்டால் போச்சு.!" என கலைஞரிடம் எதிர்பாராத பதில் வர, திகைத்திருந்த கம்பன் அடிப்பொடி சா.கணேசனை உடன் வைத்துக்கொண்டே மகாபலிபுரத்தினை சேர்ந்த வைத்தியலிங்க ஸ்தபதியின் மகனான வை.கணபதி ஸ்தபதியை அழைத்து ஏப்ரல் 23 -1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கான கால்கோளை நடத்தினார் நாத்திக முதல்வர் கலைஞர். முதலில் ரூ. ஐந்து லட்சத்தினையும், கோவிலின் இறுதிப்பணிக்கு ரூ.ஐந்து லட்சத்தினையும் வழங்கியது கலைஞரின் அரசு.
காரைக்குடியிலுள்ள கம்பன் மணிமண்டபத்தின் தென்கிழக்கில் அறுபட்டை, ஆறுநிலை அமைப்புக்களுடன் கட்டப்பட்ட தமிழ்த்தாய் கோவிலில் மூலவராக தமிழன்னையும், அவரின் இடது, வலதுப் பக்கங்களில் அகத்தியரும், தொல்காப்பியரும் வீற்றிருக்க, திருக்குறளை தந்த வள்ளுவர், சிலப்பதிகாரத்தை தந்த இளங்கோவடிகள் மற்றும் கம்பராமாயணத்தை தந்த கம்பரும் பரிவாரத் தெய்வங்களாக காட்சியளிக்க, வாசலில் துவாரபாலகிகளாக வரித்தாயும், ஒலித்தாயும் நிற்பது சிறப்பான அம்சமாகும். நீன்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்த்தாய் கோவில் ஏப்ரல் 16- 1993 அன்று, தொடங்கி வைத்த கலைஞராலேயே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.