திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவக வளாகத்திற்குள் புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக கோபாலபுரம் வீட்டில் உள்ள கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடுத்தபடியாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து முரசொலி வளாகத்திற்கு செல்ல இருக்கிறார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்திற்கு சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.