வணிக நோக்கில் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் எல்லாம் இயற்கையாக உருவாகி பெருக்கெடுத்து வருகிறது. அவை சுற்றுலாத் தலங்களாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஏராளமான ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக இயற்கையாக உள்ள அருவியின் நீர்வழிப் பாதைகளை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடந்த விசாரணையில், சுற்றுலாத்துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு மலையில் உருவாகி இயற்கை போக்கில் வரும் அருவியின் பாதை செயற்கையாக மாற்றப்பட்டு செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நோக்கத்திற்காக இவ்வாறு செயல்படும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைபோன அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.