Skip to main content

“கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்”-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

 

இன்று (10.12.2021) சென்னை ரிப்பன் மாளிகையில், கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர், சுகாதரத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சி வளாகத்தில் அறநிலையத்துறை அமைச்சர், சுகாதரத்துறை அலுவலர்கள், ஆணையர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் துணைவேந்தர்கள் என ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நேற்றைக்கு அண்ணா பல்கலைகழகத்தில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆறாம் தேதி அங்கு ஒரு மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி சார்பில் 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 

அதில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில் கிங் இன்ஸ்டியுட் வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதே போல் விடுதிகளில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதிக்க முடிவெடுக்கப்பட்டு நேற்று பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் ஒன்பது பேரை தவிர்த்து மற்றவர்கள் யாருக்கு தொற்று தென்படாதது மகிழ்ச்சியான ஒன்று. இந்நிலையில் இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 18 வயதை கடந்த அனைத்து மாணவர்களும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

 

மேலும் ஐ.ஐ.டி, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரிகளிலும் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே வகுப்பிற்கு அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம். அதே போல் உணவகங்களுக்கு கூட்டமாக அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் அதற்குரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி மறு உத்தரவு வரும்வரை டிஸ்போசல் தட்டுக்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ரொம்ப முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிய அனுமதியினை பெற்று கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வகுப்பறைக்குள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வகுப்பறை வாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், தடுப்பூசி போடாதவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்ககூடாது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏனென்றால் மாணவ சமுதாயம் தான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய சமூகம் எனவே அங்கிருந்தே இந்த பணியை நூறு சதவீதம் துவங்கிட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்