'அண்ணாமலையின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகின்ற ஆள் நான் கிடையாது' என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சொல்கிறார் 'பெண் என்பதால் பிழைச்சிப்போ என விட்டிருக்கிறேன்' என சொல்கிறார். இதை சொல்வதற்கு அண்ணாமலை யார்? மக்களிடம் கொள்ளை அடித்து தமிழ்நாட்டில் வசூல் ராஜாவாகி, பணம் சம்பாதித்து வைத்திருக்கும் திமிர்; மத்திய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆணவம் தான் அண்ணாமலையை இப்படி பேச வைக்கிறது.
அண்ணாமலையால் என்னை என்ன பண்ண முடியும். அதிகபட்சம் அண்ணாமலை கையிலும், பிரதமர் மோடி கையிலும் உள்ள அமலாக்கத்துறை எனும் வேட்டை நாய்களைத்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்ற எல்லா மாநிலங்களிலும் ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை முடிந்தால் அந்த அமலாக்கத்துறையை எங்கள் வீட்டுக்கு அனுப்பட்டும். அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர எடுப்பதற்கு ஒன்றும் கிடையாது. அண்ணாமலை மணல் மாஃபியாக்களிடம் மாதம் 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். வீட்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வாடகை என்று சொன்னார்கள். அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை.
அண்ணாமலையின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகின்ற ஆள் நான் கிடையாது. நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளைச்ச காளான் கிடையாது. நான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தேன். என் அப்பா இறந்துட்டாரு. ஒரு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்டு படிப்படியாக காங்கிரஸ் கட்சியிலும் பொதுமக்களுக்காகவும் உழைத்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு, உறுதியுடன் இருந்து 25 ஆண்டு காலம் கழித்து இந்த இடத்தில் நான் இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன். இந்த மாதிரி நான் மட்டுமல்ல அரசியலில் நேர்மையுடன் உறுதியோடும், நெஞ்சுரத்தோடும் இருந்து அரசியல் உலகில் வெற்றிபெற்ற பெண்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் மீது தனி நபர் தாக்குதல் நடத்துகின்ற கழிசடை அரசியல்வாதி தான் அண்ணாமலை'' என்றார்.