சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசிக்கும் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (29) என்ற இளம்பெண், திருமங்கலம் காவல் நிலையம் முன் திங்களன்று (செப். 14) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “நான் வசிக்கும் தெருவில் உள்ள விஜய் என்பவர் என்னைக் காதலித்து வந்தார். மேலும் திருமணத்திற்கு முன்பே என்னைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். சில நாட்களில் நான் கர்ப்பம் அடைந்தவுடன், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அவருடைய சித்தியின் முன்னிலையில், தாலி கட்டினார். அதன்பிறகு, இருவரும் அவருடைய சித்தி வீட்டிலேயே வசித்து வந்தோம். இந்நிலையில் எங்கள் திருமணம் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரியவந்தது.
நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை அசிங்கமாகச் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இதுகுறித்து நான் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு (ஆக. 3) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த அன்று இரவே விஜய் குடும்பத்தினர் என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினர்.
ஆணையர் அலுவகத்திற்கும் இணையம் மூலம் புகார் அளித்துள்ளேன். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. இதுகுறித்து கேட்கும் போதெல்லாம் பொறுமையாக இருங்கள் எனக் கூறி முறையாக காவல் துறையினர் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்தனர். நான் எம்.ஏ., பிஎட். முடித்து ஆங்கில ஆசிரியராக வேலை செய்துவந்தேன். அங்கு காவல் துறையினர் சென்று விசாரணை நடத்திவிட்டு, அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று கூறியதால், வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.
வீட்டு உரிமையாளரும் வீட்டைக் காலி செய்யுமாறு கூறுகிறார். மேலும், விஜய் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. நான் இதுகுறித்து மாதர் சங்க நிர்வாகிகளிடம் கூறினேன். அவர்கள் தலையிட்டபின்பு இன்று (திங்கட்கிழமை) காலை, காவல் துறையினர் அவரைக் கைது செய்வதாகக் கூறி சமாதானம் பேசுகின்றனர். விஜயைக் கைது செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.
இதற்கிடையே உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரவணச்செல்வி, செயலாளர் சித்ரகலா, பொருளாளர் ஜூலி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மகளிர் சட்ட உதவி மைய மாநிலச் செயலாளர் மனோன்மணி, துணைத் தலைவர் பிச்சையம்மாள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை 3 நாட்களில் கைது செய்வதாக உதவி ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து போரட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.