அண்மையாகவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை எதிர்த்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி கச்சத்தீவு திருவிழாவையும் மீனவர்கள் புறக்கணித்திருந்தனர். இந்த சூழலில் இந்திய-இலங்கை குழு இன்று கொழும்புவில் மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.