பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் (20.07.2024) கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.