ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அடுத்தகட்டமாக நெல்சனிடமும் போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இத்தகைய சூழலில் தான் மோனிஷாவும் மொட்டை கிருஷ்ணனும் சென்னை நட்சத்திர விடுதியில் சந்தித்ததாகத் தகவல் வெளியானது. மேலும் மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்குச் சென்றிருப்பதாகவும் அந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் மோனிஷாவிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது. அதோடு மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா செல்போனில் உரையாடியது தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது மொட்டை கிருஷ்ணன் தனது பள்ளி காலத்து நண்பர் என்று தெரிவித்த மோனிஷா, அவர் வழக்கறிஞராக இருப்பதால் வழக்கு தொடர்பாகப் பழக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் நண்பர் என்ற முறையில் அவர் பணம் கேட்டதால் அனுப்பியதாகவும் அவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மோனிஷா நெல்சன் தற்போது மறுப்பு தெரிவித்து பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷா நெல்சன் ஆவார். இவருக்கு எதிராகப் பல இணையதளங்கள், செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடும் வகையில் செய்திகள் மற்றும் நேர்காணல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 07 அன்று வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மோனிஷாவை போலீஸார் சம்மன் அனுப்பிக் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறையினரிடம் தெளிவுபடுத்தினார். மேலும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தான் மோனிஷா வழக்கறிஞர் கிருஷ்ணனுக்குப் பணப் பரிவர்த்தனைகள் செய்து இருந்தார் எனச் செய்திகள் இன்று வெளியானதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த செய்திக்கு அவர் தரப்பில் இருந்து முற்றிலும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது ஆகும். மேலும் இது போன்ற செய்திகள் மோனிஷாவிற்கும், அவரது கணவரின் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் ஊடகங்களையும் பிறரையும் மோனிஷா கேட்டுக்கொள்கிறார். சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றிலுமாக புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்தகைய செய்திகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனைப் பின்பற்றாத பட்சத்தில் மோனிஷா தனது நலன் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்கச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.