பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது கடந்த 3ஆம் தேதி (03.10.2024) தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இந்த கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றப்பத்திரிக்கையின் படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகப் பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாகச் சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் ஆகிய இருவரும் தலைமுறைகளாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 26 பேரையும் சென்னை மாவட்ட அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத் தலைவர் முன்பு இன்று (22.10.2024) ஆஜர் படுத்தப்பட்டனர். அதாவது முதலில் 3 பெண்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின்னர் 23 பேர் என மொத்தம் 26 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்யும் வகையில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையொட்டி மாவட்ட அறிவுரை கழக அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் மற்றும் இரு உதவி ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.