திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள பாச்சல் பகுதியில் தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆயுதப்படை டிஎஸ்பியாக இருப்பவர் விநாயகம். இவரும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் வாகனப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் இணைந்து கொண்டு அங்கு பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவலர்களை மிகவும் தரக்குறைவாக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
காவலர்கள் தங்களது திருமணத்திற்காக 30 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்தால், டிஎஸ்பி விநாயகம் வெறும் 7 நாட்கள் மட்டுமே தருகிறாராம். மேலும் வாராந்திர ஓய்வு கேட்டால் விடுமுறையெல்லாம் கொடுக்க முடியாது எனக் கூறி மனுவை முகத்தில் வீசி விடுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லால், காவலர்களின் பணி நேரம் முடிந்த பிறகும் வீட்டிற்கு அனுப்பாமல் அங்கேயே தங்க வைக்கிறாராம். ஆயுதப்படை வளாகத்தில் அடிப்படை வசதி, தங்கும் வசதி, கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் காவலர்கள் அங்கேயே தங்க வைக்கப்படுவதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஆயுதப்படை காவலர் ஒருவர் டிஎஸ்பி விநாயகத்திடம் விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். அதை ஏற்காத விநாயகம் அந்த காவலரை ஆபாசமாக திட்டும் ஆடியோ சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து ஆயுதப்படை காவலர்களிடம் பேசியபோது, ''எங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியல. அந்த டிஎஸ்பி விநாயகம் எங்கள ரொம்ப டார்ச்சர் பண்றாரு. நாங்க ஏதாவது கேள்வி கேட்டால் உங்களுக்கு மெமோ கொடுத்து சம்பளம் வராமல் பதவி உயர்வு கிடைக்காமல் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆனால் அவரது சமூகத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு மட்டும் லீவு கொடுக்கிறார். இங்க எல்லாரும் பயங்கர மன உளைச்சலில் இருக்கிறோம். நாங்க யாராவது தற்கொலை செய்துகொண்டால் அதற்கு டிஎஸ்பி விநாயகம்தான் காரணம்'' எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.