Skip to main content

ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன்

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன்

‘ஒகி’ புயலால் கரைதிரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே காட்டும் பாசாங்கு! தமிழக அரசை ‘பைபாஸ்’ செய்து; டெல்லிக்கே போய் மீனவர்க்கு நிதி வழங்கக் கோருவதாக ஆளுநர் நடத்தும் பம்மாத்து! ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்று மீனவர்க்கு 20 லட்சம் அறிவிப்பு! மீனவரின் வாழ்வுரிமையையே அலட்சியம் செய்யும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், எச்சரிக்கையே செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளின் சொல்லிலும் உண்மை இல்லை; செயலிலும் நேர்மை இல்லை.

இதை எத்தனையோ விடயங்களில் பார்த்திருக்கிறோம்; இப்போது ‘ஒகி’ புயலில் சிக்கிய மீனவரைக் கைவிட்டதில் கண்கூடாகவே காண்கிறோம்.

புயல் அடித்து 14 நாட்களாகியும் இன்னும் 600 மீனவர்கள் கரை வந்து சேரவில்லை; 100 மீனவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்திருக்கிறது.

10 கப்பல்கள் 3.25 லட்சம் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக பாதுகாப்புத் துறை கூறியது.

ஆனால் ஒரு மீனவரையாவது, ஒரு மீனவரின் சடலத்தையாவது கடற்படை மீட்டதாகத் தெரியவில்லை.

இதுவரை உயிருடன் வந்த மீனவர்கள் கடலில் அவர்களாகத்தான் போராடி கரை சேர்ந்திருக்கிறார்கள்.

கரைதிரும்பாத மீனவரைத் தேட அவர்களின் மீனவச் சொந்தங்கள்தான் தங்கள் படகுகளுடன் கடலுக்குச் சென்றனர்.

இப்படி தூத்தூர் மீனவர்கள் சென்று தேடியதில், கடலில் 13 சடலங்கள் மிதப்பதையும், அருகில் உடைந்துபோன படகு, அதில் ஒரு பையில் 8 செல்போன்கள், 2 அடையாள அட்டைகள் இருந்ததையும் கண்டு செல்போனில் படம்பிடித்து வந்தனர். அடையாள அட்டைகள் நீரோடியைச் சேர்ந்த சுனில்குமார், மனோஜ் ஆகியோருடையவை. அழுகிய நிலையில் இருந்ததால் சடலங்களை மீட்க முடியவில்லை.

குமரியில் மீனவரைப் போய் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் உண்மைக்கு மாறாகவே பேசினார். முன்பு “நீட்” விவகாரத்திலும் ராமேஸ்வரம் மீனவரை கடற்காவற்படை சுட்டதிலும் எப்படிப் பேசினாரோ, அப்படித்தான் குமரி மீனவரைத் தேடுவதிலும் பேசினார்.

தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரோ, “கடைசி மீனவரை மீட்கும் வரை தேடும் பணி தொடரும்” என்ற ஒரே வாக்கியத்தையே                   14 நாட்களாக ஊடகத்தில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கரை திரும்பாத மீனவரை மீட்கக் கோரி மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்கள் 16,000 பேர் மீது வழக்குப் போட்டிருக்கிறது தமிழக அரசு.

சென்னை முதல் குமரி நீரோடி வரையிலான அத்தனை கடலோர மீனவ மக்களும், புயலில் சிக்கிய மீனவரை மீட்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் மாநில முதல்வர், மீனவ கிராமங்கள் கண்ணீரில் மிதக்கும் சேதியே அறியாதவர் போல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிலும் ஆர்.கே.நகர் தேர்தல் திருவிழாவிலும் மூழ்கியிருந்தார்.

ஆர்.கே.நகரில் மூழ்கியவருக்கு அதன் ஆழம் தெரியவந்தது; அதாவது டெபாசிட்டே தேறாது என்று!

அதன் பின்புதான் குமரிக்கு ஓடினார். ஒரு அரை மணி நேரம் மட்டும் அங்கே இருந்து, உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும் ஒருவருக்கு அரசு வேலையும் என அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியோ, இரண்டு மாதங்களாக குஜராத்தை விட்டு வேறிடம் நகரவேயில்லை.

குமரி மீனவரைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாத அவருக்கு, நீர்வழி விமானத்தில் ஏறி “ஹாய்” உலா போக மட்டும் முடிகிறது என்றால், சொல்ல வேண்டியதேயில்லை, “அவர் அப்படித்தான்!”

அந்த நீர்வழி விமானத்தை மட்டும் குமரிக் கடலில் இறக்கியிருந்தால் எத்தனையோ மீனவர்களை மீட்டிருக்க முடியும். நீர்வழி விமானம் என்பது அடிப்பாகம் நீரிலும் மேல்ப்பாகம் வானிலும் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட புதியதோர் தொழில்நுட்பமாகும்.

இதற்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று நடுவண் அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார்; என்னவென்றால், ‘ஒகி’ புயல் பாதித்த குமரி மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

தமிழக அமைச்சரவை செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் ஆளுநர் தானே செய்வதாக பம்மாத்து காட்டுகிறாரே; இந்த அத்துமீறல் ஓர் அக்கிரம வக்கிரம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆக மத்திய, மாநில அரசுகளின் நோக்கம் அல்லல் படும் தமிழக மக்களைப் பற்றியதல்ல.

பெரும்பான்மை இல்லாத பழனிச்சாமிக்கு தனது அமைச்சரவையை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது.

இதேபோல் மோடிக்கு பழனிச்சாமி அமைச்சரவையை பொம்மையாக வைத்துக் கொண்டு ஆளுநர் மூலம் பாஜகவின் ஆட்சியை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

எனவேதான் மீனவர் மட்டுமல்ல, எவரைப் பற்றிய கவலையும் இவர்களுக்கு இல்லவே இல்லை.

இத்தகைய கேடுகெட்ட போக்கினை அம்பலப்படுத்தி தொடர்ந்து எதிர்த்து வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மீனவரின் வாழ்வுரிமையையே அலட்சியம் செய்யும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், எச்சரிக்கையே செய்கிறோம்.

சார்ந்த செய்திகள்