தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன்படி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது கனரக வாகனங்கள் டூவீலர் உட்பட சாலைகளில் செல்லக்கூடாது. மருத்துவ உதவிகள் தவிர அனைத்தும் முடக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு கூறுகின்றது.
கரோனா வைரஸ் தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் தமிழக அளவில் ஆறாவது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் நோய் பரவலுக்கு காரணமாகிறது என்பதால் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமை தேவையான மீன் இறைச்சி போன்ற பொருட்களை முன்கூட்டியே வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கும் அரசு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் எந்த தடையும் இல்லாமல் சாலைகளில் அணிவகுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. உதாரணமாக அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி கொண்டு வெளியூர்களுக்குச் செல்லும் லாரிகள், அதேபோன்று வெளியூர்களிலிருந்து சிமெண்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் இந்த தடை உத்தரவு உள்ள ஞாயிற்றுக்கிழமை அன்று தடையில்லாமல் சென்று வருகின்றன.
அரியலூர் கடலூர் மாவட்ட உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினர் இந்த சிமெண்ட் ஆலை லாரிகளை மட்டும் அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து வழியனுப்புவது போல சிமெண்ட் லாரிகளை மரியாதை கொடுத்து ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளையும் தாண்டி அனுப்பி வருகிறார்கள். சாதாரண மக்கள் டூவீலரில் சென்றாலோ கார் போன்ற வாகனங்களை சென்றாலோ அவரை மடக்கி ஆயிரம் காரணங்கள் கேட்டு குடைந்து எடுப்பது சரியான காரணங்கள் இல்லாவிட்டால் அபராதம் விதிப்பது என்று விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.
அந்த கடுமையை சிமெண்ட் ஆலை லாரிகளுக்கு மட்டும் ஏன்காட்டுவதில்லை. சாதாரண மக்கள் போக்குவரத்து செய்வதால் கரோனா பரவும் என்று தடை போடும் அரசும் காவல் துறையும் சரக்கு ஏற்றி சென்று வரும் லாரி டிரைவர்கள் மூலம் கரோனா வராதா, பரவாதா. இதையெல்லாம் காவல்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி தொடுக்கிறார்கள் அரியலூர் கடலூர் மாவட்ட மக்கள். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது அனைவருக்கும் என்று கூறிவிட்டு சிமெண்ட் ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக அரசும் காவல்துறையும் நடந்து கொள்கின்றது. இப்படி பாரபட்சம் காட்டுவதற்கு பதில், ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை கைவிட்டு விடலாம் என்று கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள். சட்டம் நீதி அனைவருக்கும் சமம் என்கிற நமது நாட்டில் ஆலை முதலாளிகளுக்கு ஏன் சட்டம் வளைந்து கொடுக்கிறது.