சென்னை மயிலாப்பூர் அருகே நண்பன் இறந்த துக்கத்தை அனுசரிப்பதற்காக அந்த பகுதியில் இருந்த கடைகளை மூடச்சொன்ன நபர் ஒருவர் பெண் ஒருவரிடம் பெட்டிக்கடையை மூடச்சொல்லி தகராறு செய்த நிலையில், அந்த நபரை அப்பெண்ணின் மகன் பதிலுக்குத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை மயிலாப்பூர் பி.என்.கே தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி. ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று மதியம் 1.39 மணியளவில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு அருகே இருக்கக்கூடிய பூக்கடைகள், மாலை கடைகள் மற்றும் பழக்கடைகளுக்கு சென்று எனது நண்பன் இறந்துவிட்டான், கடையை மூடுங்கள் எனச் சொல்லி மதுபோதையில் தகராறு செய்திருக்கிறார்.
அப்பொழுது அந்தப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்த அம்பிகா என்பவரிடம் சென்று கடையை மூடச்சொல்லி வலியுறுத்தியுள்ளார். அப்பொழுது அந்த பெண்மணி ''ஏன் கடையை மூட வேண்டும்'' எனக் கேள்வி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது மதுபோதையிலிருந்த மூர்த்தி அம்பிகாவை தாக்கியுள்ளார். அதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அம்பிகாவின் மகன் குமார் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து மூர்த்தியை சரமாரியாகத் தாக்கினார். காயமடைந்த மூர்த்தி தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.