Skip to main content

'பெண்களை குறிவைத்து பேசுவதா?' - ஹெச். ராஜாவிற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்  

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 'Are you targeting women?' - The court strongly condemned H. Raja

 

'பெண்களை குறிவைத்து பேசுவதை ஏற்க முடியாது' என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே நீதிமன்றத்தை அவதூறாக பேசியிருந்தது தொடர்பாக ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிருப்திகள், கண்டனங்கள் தமிழகத்தில் கிளம்பியது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை குறிப்பாக அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்திருந்தனர். ஏழு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

அதேபோல் பெரியார் சிலை குறித்து டிவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும் ஹெச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது. புகார் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கக்கூடிய 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்பொழுது ஹெச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவிவழி செய்தி தான் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தான் ட்வீட் போட்டார் என எந்த ஆதாரமும் இல்லை. அதற்கான ஆதாரங்களை காவல்துறை சமர்ப்பிக்கவில்லை என வாதிட்டார். கனிமொழி மீதான கருத்து என்பது அரசியல் ரீதான கருத்து என்றும் அதில் பாதிக்கப்பட்ட கனிமொழி புகார் தராமல் வேறு யாரோ புகார் கொடுத்தார்கள் என்றும் வாதிட்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரினார்.

 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச். ராஜாவுடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டும் அல்ல அனைவரையும் பாதிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார்' எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பெண்களைக் குறி வைத்து அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருமுறை இல்லை. பலமுறை இது போன்று பேசியுள்ளார் என கண்டனம் தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்